ரொம்ப தூரம் செல்லாமல் இருக்க ஆட்டின் முன்காலில் ஒன்றை முழங்காலோடு மடக்கி வைத்து கட்டி விட்டு மேய்ச்சலுக்கு அனுப்பும் மனிதர்களுக்கு மத்தியில் ஆடு நனையாமல் இருக்க விவசாயி கணேசன் ”ரெயின் கோட்” போட்டிருப்பதாக பாராட்டுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் ஆடு மேய்ச்சலுக்கு செல்லும் போது மழையில் நனையாமல் இருக்க சாக்கை உடையாக அணிந்து விடுகிறார்.
கால்நடைகள் மீது அக்கறை கொண்ட அவரின் செயலையும், “ரெயின் கோட்” போட்டு மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகள் குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வயது 70. விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பொழிந்து வருவதால் மேய்சலுக்கு சென்ற அவரது ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது.
தன்னுடைய பிள்ளைகளாக கருதி ஆடு வளர்ப்பில் ஈடுப்பட்டு வரும் கணேசனுக்கு ஆடு மழையில் நனைந்து ஈரத்தில் நடுங்குவதை பார்க்க மனமில்லை.
மேய்ச்சலுக்கு போகும் ஆடு மழையில் நனையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு ஆடுக்கு ”ரெயின் கோட்” போட்டால் என்னவென்று தோன்றியிருக்கிறது.
இது குறித்து கணேசனிடம் பேசினோம், ''15 வருடங்களுக்கு மேலாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகிறேன்.
கால்நடை வளர்ப்புதான் எனக்கான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பிள்ளைகளை போல கவனித்து அதுகளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வேன்.
கடந்த ஆண்டு பெய்த மழையில் நோய் வாய்ப்பட்டு மூன்று ஆடுகள் இறந்து விட்டன. அதனால் இந்த முறை மழை தொடங்கிய உடனே அதிலிருந்து ஆடுகளை பாதுக்காப்பாக கவனிக்க தொடங்கினேன்.
தினமும் காலை 9 மணி முதல் சாயங்காலம் 5 மணி வரை ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
கடந்த சில வாரங்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.